நான் இதற்கு முன்பு அதிகமாக புத்தகங்கள் படித்ததில்லை. ஆனாலும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டு. நான் படித்த ஒரு சில புத்தகங்களும் கடந்த ஓராண்டுக்குள் என்னால் படிக்கப்பட்டவையே. அதிலும் இரண்டு எழுத்தாளர் திரு. பாலகுமாரன் அவர்கள் எழுதியது. எனது சகோதரர் திரு தீபக் அவர்களின் அறிவுரையின் பேரில் நான் படித்த மூன்றாவது பாலகுமாரன் புத்தகம் "வெற்றி வேண்டுமெனில்".
இந்த புத்தகம் எனக்கு தரப்பட்டபோதே எனக்கு அவர் கொடுத்த அன்பான வேண்டுகோள் "இது ஒரு பொக்கிஷம். பத்திரமாக திருப்ப கொண்டு வந்து விடுங்கள்" என்பதே. நான் தோல்வியால் துவண்டு கிடக்கும் இந்நேரம் இந்த புத்தகம் எனக்கு தந்த உற்சாகம் எனக்குள் ஒரு பெரிய தன்னம்பிக்கையை உருவாக்கியுள்ளது. நானும் வெற்றி பெற முடியும் என்ற ஒரு தைரியத்தையும் தந்துள்ளது. இந்த புத்தகம் தந்த சில கருத்துக்கள் என் வாழ்வோடும் ஒத்திருந்தன. அவை நாம் இந்த சூழ்நிலையில் இவ்வாறுதான் செயல்பட வேண்டும் (அல்லது) வேண்டாம் என தெளிவாக எடுத்துரைத்தது. நான் படிக்கும் போது மிகவும் ரசித்த வரிகளை இங்கே பதிவிடுகிறேன். இந்த புத்தகம் சிறு சிறு பிரிவுகளாக 21 அத்தியாயங்களை கொண்டது.
இந்த புத்தகம் எனக்கு தரப்பட்டபோதே எனக்கு அவர் கொடுத்த அன்பான வேண்டுகோள் "இது ஒரு பொக்கிஷம். பத்திரமாக திருப்ப கொண்டு வந்து விடுங்கள்" என்பதே. நான் தோல்வியால் துவண்டு கிடக்கும் இந்நேரம் இந்த புத்தகம் எனக்கு தந்த உற்சாகம் எனக்குள் ஒரு பெரிய தன்னம்பிக்கையை உருவாக்கியுள்ளது. நானும் வெற்றி பெற முடியும் என்ற ஒரு தைரியத்தையும் தந்துள்ளது. இந்த புத்தகம் தந்த சில கருத்துக்கள் என் வாழ்வோடும் ஒத்திருந்தன. அவை நாம் இந்த சூழ்நிலையில் இவ்வாறுதான் செயல்பட வேண்டும் (அல்லது) வேண்டாம் என தெளிவாக எடுத்துரைத்தது. நான் படிக்கும் போது மிகவும் ரசித்த வரிகளை இங்கே பதிவிடுகிறேன். இந்த புத்தகம் சிறு சிறு பிரிவுகளாக 21 அத்தியாயங்களை கொண்டது.
1. காதல் செய்வீர் உலகத்தீரே
காதல் என்பது மதித்தல். அடுத்தவரின் மன உணர்வுகளை, விருப்பு வெறுப்புகளை, திறமைகளைப் புரிந்து மதித்தல், பாராட்டுதல், பாராட்டப் பெறுதல். உற்சாகமடைதல், உற்சாகப்படுத்துதல். வேறு விதமாய் சொல்வதென்றால், காதல் என்பது அடுத்தவரைக் கவனமாய் பார்த்தல். பரிசீலித்தல். மதித்தல்தான் அன்பு. அன்புதான் ஒருமுகப்பட்ட அக்கறை.
2. உடலின் ஆட்சி
காமச் சேறே கதியென உழன்றால், குடிசைகூட கட்ட முடியாது. பாதுகாப்பு தர முடியாது. ஆணை பெண் நேசிக்க மாட்டாள். நேசிக்காத பெண்ணிடமிருந்து காமம் வராது . வந்தாலும் ருசிக்காது.
ராத்திரி ஆச்சுனா தண்ணி போட்டே ஆவணும் என்று இருபது வயதில் தோன்றுமாயின், நாற்பது வயது தாண்டுவது அரிது. தாண்டினாலும் நிமிர்ந்த நடை இருக்காது. வெறுமே நோயுற்ற பூனையாய் இடையுறாத சலிப்பில் வாழ்வு நகரும். நொந்து கொள்ளல் அதிகமாகும்.
ராத்திரி ஆச்சுனா தண்ணி போட்டே ஆவணும் என்று இருபது வயதில் தோன்றுமாயின், நாற்பது வயது தாண்டுவது அரிது. தாண்டினாலும் நிமிர்ந்த நடை இருக்காது. வெறுமே நோயுற்ற பூனையாய் இடையுறாத சலிப்பில் வாழ்வு நகரும். நொந்து கொள்ளல் அதிகமாகும்.
3. சோம்பல் அறுங்கல்
சோம்பல் ஒரு பழக்கம். படிந்துவிட்டால் நீக்குவது மிக மிகக் கடினம். சோம்பலற்று இருக்க இளம் வயதிலேயே பழக வேண்டும். முதன்மையாய் வருவது, புகழ்பெறுவது, பிறரால் பாராட்டப்படுவது என்பவைகளில் சுவை வேண்டும். தோல்வியை கண்டு கலவரம் வரவேண்டும். பொழுது போக்கு என்பதே பிழைப்புக்கான வேலையாக இருந்தால் அதாவது வேலையே பொழுது போக்காக இருந்தால் வெற்றி நிச்சயம்.
4. தொடர்பு கொள்ளுதல்
பேச்சு என்பது மனதின் மொழி. இதயத்தின் வாசல். எனவே அதை மிகச் சுத்தமாய் வைத்திருக்க வேண்டும். மனம் படபடப்பாக இருந்தால் பேச்சு குழறலாக கூச்சலாகத்தான் வரும். மனம் அமைதியாக இருந்தால், என்ன பேசுகிறோம் என்ற முழு நினைவோடு, உணர்வோடு நாம் பேசலாம்.
பேச்சு என்பது மனதின் மொழி. இதயத்தின் வாசல். எனவே அதை மிகச் சுத்தமாய் வைத்திருக்க வேண்டும். மனம் படபடப்பாக இருந்தால் பேச்சு குழறலாக கூச்சலாகத்தான் வரும். மனம் அமைதியாக இருந்தால், என்ன பேசுகிறோம் என்ற முழு நினைவோடு, உணர்வோடு நாம் பேசலாம்.
அதிகக் கூச்சலில்லாமல் பேசுவது. குறைவாக பேசுவது, படபடப்பு இல்லாமல் பேசுவது, கெட்ட வார்த்தைகளை முடிந்த வரை தவிர்ப்பது போன்றவை உங்களைப் பற்றிய மதிப்பை உயர்த்திவிடும்.
5. அறிவதே வாழ்க்கை
ஒருமையுடன் நினைக்கின்ற உத்தமர் யார் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் இருக்கிறேன். அப்படிப்பட்டவரோடு கூடாமல் இருக்கிறேன்.
எந்த அறிதலும் வீண் போவதில்லை. அறிதலுக்கு ஆசைப்படுவது மனிதர்களுக்கு இயல்பு. வெற்றி வேண்டுமெனில் அறிந்து கொள்ள ஆசைப்படுங்கள்.
6. கர்வம் அழித்தல்
ஒரே ஒரு வெற்றியோடு வாழ்க்கை முடிந்துவிடவில்லை. ஒரு இடத்தில் ஜெயித்ததும், உடனே ஊர் அடுத்த இடத்தில் எப்போது ஜெயிக்கப் போகிறார் அடுத்த வெற்றி எப்பொழுது என்றுதான் கேட்க ஆரம்பிக்கும்.
அடுத்தமுறை நீங்கள் ஜெயிக்கவில்லை என்றால், போன முறை ஜெயித்ததே பெரிய அதிர்ஷ்டம் என்று கேலி செய்யப்படுவீர்கள். இந்த முறை தோற்றதற்கு பொது ஜனம் கைகொட்டி சிரிப்பதைக் கண்ணார காண்பீர்கள்.
எனவே, ஜெயித்து பாராட்டு பெறும்போதே மறுபடி தோற்றால், இவர்கள் அத்தனை பேரும் கேலி செய்வார்கள் என்ற பயத்தோடு அவர்களைப் பார்க்க வேண்டும்.
7. தனக்குள் பார்த்தல்
தன்னைப் பற்றிய தெளிவு உள்ளவர்கள் வேகமாகப் பேச மாட்டார்கள். உரத்த குரலில் விவாதிக்கமாட்டார்கள். நாலு வரிகளில் அழுத்தம் திருத்தமாக தன்னை பற்றி, தன் நிலைமைப் பற்றி விளக்கிச் சொல்லி விடுவார்கள். மற்றவர்கள் பேசுவதை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அடுத்தவரை புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள். அவர்கள் பேசுவதில் உண்மையையும் பொய்யையும் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.
8. கோபம் தவிர்த்தல்
மற்றவருக்கு உண்மையாக இல்லாததுகூட மன்னிக்கப்படலாம். நீங்கள் உங்களுக்கே உண்மையாக இல்லாது போனால் உங்களுக்குள்ளேயே பொய்க் காரணங்கள் சொல்லிக் கொண்டால், இதை விட கேவலமான விஷயம் ஏதேனும் உண்டா? புத்தி உள்ளவர்கள் இதை செய்வார்களா?
கோபம், உறவுகளைத் துண்டிக்கிறது. எதிரிகளை உற்பத்தி செய்கிறது. நண்பர்களை வெறுக்க வைக்கிறது. நெருங்கியவர்களை விலக வைக்கிறது. ஒருவரின் மனம் போடுகிற மிகப்பெரிய தந்திரம் என்னவெனில், எங்கு கோபம் செல்லுபடியாகுமோ அங்குதான் காட்டுவார்கள். மற்ற இடத்தில் அவர்கள் மரவட்டை போல் சுருண்டுகிடப்பார்கள்.
9. களவு மறுத்தல்
திருட எது தூண்டுகிறது? பேராசை. பேராசைக்கு என்ன காரணமாக இருக்கிறது. தன்னைத் தவிர மற்றவர்கள் முட்டாள்கள் என்று நினைப்பதுதான். எல்லா திருடர்களும் மிகவும் கெட்டிக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சூழ்ச்சியைக் கெட்டிக்காரத்தனம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமைதிதான் உலகத்தில் மிகப்பெரிய கெட்டிக்காரத்தனம். எல்லா கெட்டிக்காரத்தனமும் அகம்பாவத்தின் வெளிப்பாடு. அகம்பாவம் வெகு நிச்சயமாய் ஒருநாள் உடைந்துதான் தீரும். அகம்பாவம் அறுந்து விழும்போது தான் அவர் வாழ்க்கையும் முடிகிறது.
10. வைராக்கியம் வளர்த்தல்
சர்க்கரை நோய்க்காரன், திருப்பதி லட்டை வெங்கடேசப் பெருமாள் கொடுத்தால் கூட வாங்கக்கூடாது. இனிப்பு கொடுக்கப்பட்டால், வாங்கி அடுத்தவரிடம் கொடுக்க வேண்டும். கையை சுத்தமாகத் துடைத்துவிட்டு, நகர்ந்துவிட வேண்டும். இதற்குப் பெயர்தான் வைராக்கியம். வைராக்கியம் என்பது தன்னைத்தானே புடம் போட்டு கொள்வது. அதில் மூன்றாம் மனிதர் இல்லை.
11. கடுமையாக உழைத்தல்
ஒரு வேலையை திறம்பட துல்லியமாய் செய்வது தான் கடும் உழைப்பின் வெளிப்பாடு. ஆர்வமான வேலையில் கடும் உழைப்பு எளிதாக வருகிறது. அல்லது செய்யும் வேலையை விரும்பி விட்டால் வேலையில் நாட்டம் அதிகமாகிறது.
கடும் உழைப்பு என்பது ஒரு சந்தோஷம். அதை செய்து கொண்டே இருக்க வேண்டும். வெகு நிச்சயமாய் ஏதோ ஒரு கணத்தில் அது கிரீடத்தைக் கொண்டுவந்து உங்கள் தலையில் வைக்கும்.
12. பொறாமை அகற்றல்
நெல்முனை அளவும் பொறாமை இல்லாமல் நிச்சயம் ஒருமனிதரால் இருக்க முடியும். எனக்குண்டானது கிடைத்திருக்கிறது. இப்படி இந்த விஷயங்கள் கிடைத்திருப்பதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இதை வைத்துக் கொண்டு என்னால் சுகமாக இருக்க முடியும் என்ற எண்ணம் அமைதியாக யோசித்தால் வெகு எளிதாக வந்துவிடும்.
உழைக்க கற்றுக் கொண்டால் போதும். உழைக்கக் கற்றுக் கொண்டவர்கள் ஒருபோதும் பொறாமைப்படுவது இல்லை. உழைப்பு இல்லாதபோதுதான் பொறாமை நம்மை ஆக்கிரமித்துக்கொள்கிறது.
13. ஆரவாரம் அகற்றுதல்
ஒரு வீட்டு காம்பவுண்டு சுவர் முழுவதும் எங்கள் அண்ணனே, இதய தெய்வமே என்று எழுதுவது ஓசையில்லாத ஆரவாரம். எழுதியவருக்கு வீடும் கிடையாது. சுவரும் கிடையாது. என்பதற்காக அடுத்தவர் வீட்டு சுவரில் எழுதலாமா? அண்ணனின் திருமுகத்தை வரைந்து அதற்குக் கீழே தன் திருமுகமும் வரைந்து இவன் செயலாளர் என்று கொட்டையாய் எழுதிக் கொள்வது அடக்கமான விஷயமில்லை. ஆரவாரம் தான்.
கடும் உழைப்பும் விடா முயற்சியும் துணிச்சலும் தெளிவும்தான் ஒருவரை முன்னுக்கு கொண்டு வரக்கூடிய விஷயங்கள். சுற்றி உக்கார்ந்து பத்து நண்பர்களாகப் பேசும்போது இல்லாதது பொல்லாதது தான் பேச முடியும்.
ஆரவாரம் ஒரு போதை விஷயம். மதுப்பழக்கம். மீள வேண்டுமென்ற எண்ணம் இருந்தால்தான் மீட்பு எளிது. ஏனென்றால் முட்ட முட்ட குடித்தவர் திக்கு திசை தெரியாமல் உளறுவது போலத்தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கும்.
14. பதட்டம் குறைத்தல்
பதிலை நிதானமாகச் சொல்ல முயற்சிக்கிறபோது, அந்த நேரத்தில் எதிராளியின் முகம் பார்த்து பதில் சொல்ல அவகாசம் எடுத்துக் கொள்கிற போது அந்த பதில் உறுதியாகவும், மிக அழகான வாக்கியங்களாகவும் வெளிப்படும். இது மிக சுகமான அனுபவம். உங்களை மற்றவருக்குக் கம்பீரமாகக் காட்டும்.
15. காலம் தவறாமை
ஏன் தாமதமாகிவிட்டது என்ற கேள்விக்கு தாமதமாகிவிட்டது என்பது பதிலே அல்ல. அது அசட்டுத்தனம். மோசமான அவலம்.
இந்தியாவில் மனிதவளம் அதிகம் இருப்பினும் அகம்பாவமும், அலட்சியப் போக்கும், அடுத்தவரைப் பற்றிய அக்கறையின்மையும், அதனால் ஏற்படுகிற நேரந் தவறுதலும், காலம் பற்றிய கணிப்பு இல்லாமையும் மக்களை வலுவில்லாமல் செய்து விடுகின்றன.
காலம் தவறாமையில் இன்னொரு கம்பீரமும் இருக்கிறது. பத்து முறை தவறாமையை கடைபிடித்து, மிகச் சரியான நேரத்திற்கு ஒவ்வொரு விஷயத்திற்கும் போய் நின்றால் உங்களை சுற்றி உள்ளோருக்கும் அந்தப் பழக்கம் வந்துவிடும்.
16. தூங்கப் பழகுங்கள்
நல்ல தூக்கம் இல்லாமல் நல்ல வாழ்க்கை அமையாது. உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து இருக்கிறது என்பதற்கு ஒரே சாட்சி நீங்கள் நன்றாக உறங்குவது.
தூக்கம் உங்கள் கண்களை தழுவுவதை மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக் கொள்வதை நீங்கள் அதன் வயப்பட்டு உங்களை இழப்தைக் கவனிக்கத் தொடங்கிவிட்டால் உங்கள் மனதின் மற்ற ஆட்டங்களையும் கவனிக்கிற பழக்கம் ஏற்பட்டுவிடும்.
கனவின் உத்தேசம் தெரிந்து அதை கையாளத் தெரிந்துவிட்டால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை வெகு சுலபமாக எதிர்கொண்டு தீர்த்து வைக்கலாம். தூக்கம் என்பது உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரவல்லது. தூக்கம் என்பது இயற்கை மனிதனுக்கு கொடுத்த கொடை. ஏன் தூக்கம் என்பது உயிரினங்களுக்கு இயற்கை கொடுத்த கொடை.
17. அவமானம் தாங்கப் பழகு
நமக்கு ஏற்ப்பட்ட நிறைய அவமானப்படுத்துதலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளை பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகு வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரிய வரும்.
அவமானத்தை நன்கு அனுபவியுங்கள். அவமானப்படுத்துதலை புரிந்து கொண்டு அதற்கு அழாது கண்ணீர்விட்டு கதறாது அதை மெல்லியதாய் எடுத்துக் கொள்ளுங்கள். நகைச்சுவையாய் மாற்றி விடுங்கள்.
கோபப்படவேண்டும். நிதானமாகக் கோபப்படவேண்டும்.
18. உடற்பயிற்சி செய்யுங்கள்
எது வலுவான உடம்பு? எல்லா நேரத்திலும் துடிப்பாக இருப்பதும் பிரச்சனை போராட்டம் என்று வரும்போது கூடுதல் பலத்தோடு இயங்குவதும் நன்கு தூங்குவதும்தான் வலுவான உடம்பு.
விடியலில் நடக்கிறபோது மனம் இறை உணர்வு மிகுந்து காணப்படும். அல்லது அன்றை தினத்து வேலைகளின் மீது மிகச் சரியானபடி தன் பார்வையைத் திருப்பும். வேலைகளை நினைத்துக் கொண்டே இருந்தால் நடப்பதன் சிரமம் தெரியாது.
19. தியானம் பழகுங்கள்
அமைதி தோன்றிய மனம்தான் ஆரோக்கியமாக யோசிக்கும். அறிவார்த்தமாக சிந்திக்கும். இல்லையெனில் அறிவு குருக்குத்தனமாக கோபமாக யோசிக்க வாய்ப்பு இருக்கிறது.
அமைதியான சிந்தனைதான் ஆக்கப் பணியில் மிகப் பெரிய உதவி செய்யும். மிகச் சீராக செயல்களை செய்யும். பதற்றமில்லாமல் வெற்றி பெற்று வரும். வெற்றி பெற்ற பிறகும் பதற்றமின்றி வெற்றியை அனுபவிக்கும். செய்யும் காரியங்களில் நேர்த்தி வேண்டுமெனில் தியானம் செய்தல் அவசியம்.
வலிமையான ஞாபக சக்தி, தெளிவான சிந்தனை, அமைதியான போக்கு இவை தியானத்தால் ஏற்படும். தியானம் செய்ய செய்ய பொறாமை அறவே போய்விடும். மனதில் இருந்து பொறாமை போனால் போதும். அதைவிட உற்சாகமான ஒரு வாழ்க்கை எதுவுமில்லை.
20. நல்ல புத்தகங்கள் படியுங்கள்
நல்ல புத்தகங்கள் மனதை விசாலமடையச் செய்கின்றன. வேறு ஒரு வாழ்க்கையை, வேறு ஒருவர் அனுபவத்தை, அவர் பல ஆண்டுகள் வாழ்ந்து கற்றுக் கொண்டதை, அவர் பல புத்தகங்கள் படித்து தெளிந்து தேர்ந்ததை ஒரு புத்தகமாக, ஒரு வாக்கியமாக, ஒரு கவிதையாக நம்மிடையே பரிமாறிக் கொள்கிற போது அவர் வயதும் அனுபவமும் நம்மிடையே வந்து நிற்கின்றன.
புத்தகத்தில் சொல்லப்பட்ட கதாபாத்திரங்களை நம்முடைய விருப்பத்திற்கு கற்பனை செய்து கொள்ளலாம். இது கதாபாத்திரத்தோடு நெருக்கமாய் இருக்க உதவும். படித்ததை மறுபடியும் யோசிக்கும்போது நமது கற்பனைகள் மேலும் பலமாகின்றன. இதனால் கதை மிக ஆழமாக மனதில் தைக்கிறது.
புத்தகம் என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. புத்தகம் என்பது நல்ல நண்பன். உயர்வான குரு. சிலநேரம் கடவுளாகக் கூடக் காட்சியளிக்கும்.
21. தனிமையில் இனிமை
வெற்றி வேண்டுமெனில் தனிமையில் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். தனித்திருக்கப் பழகிக் கொள்ளுங்கள். எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.
நண்பர்கள் புரிந்து கொள்ளப்பட முடியாதபோது அல்லது நீங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டபோது மிக மோசமான எதிரியாக மாறி விடுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்களை நண்பர்களாகக் கொள்வது, நூற்றுக்கணக்கான எதிரிகளை நண்பர்களாகக் கொள்வது போல் ஏனெனில் நண்பர்கள்தான் எதிரிகளாக ஆகிறார்கள்.
அமைதிதான் ஒருவருக்கு அற்புதமான சொத்து. அமைதியற்ற மனிதர்களால்தான் உலகத்தில் வன்முறை அதிகம் ஏற்படுகின்றன.
இந்த மிகச் சிறந்த கருத்துகள் அனைத்தும் எனக்குள் உடனடியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. மேற்கூறிய அனைத்து அறிவுரைகளின்பேரிலும் இப்போது என் வாழ்க்கை அல்லது பெரும்பாலோனோரது வாழ்க்கை நடந்து கொண்டிருக்கவில்லை. இனியாவது பின்பற்ற முயற்சிப்போம் "வெற்றி வேண்டுமெனில்."

