Wednesday, 17 August 2016

"ஜோக்கர்"- இது விமர்சனம் அல்ல

ஜோக்கர் - என்னை பாதித்த ஒரு படம். ராஜூமுருகனின் 'குக்கூ' என்ற ஒரு தரமான படைப்பை நான் தவறவிட்டேன். ஆனால் இந்த முறை இல்லை. முதல் 2 நாட்கள் டிக்கெட் கிடைக்காமல் மூன்றாம் நாள் இரவுக்காட்சி சென்றேன். மக்கள் நல்ல படங்களை ஆதரிக்கிறார்கள் என்பதற்கு இந்த படம் சான்று. 



சமகால அரசியல், சமூக அவலங்களை எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் காட்சிப்படுத்திய தைரியத்திற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். கழிவறைக் கட்டட சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு, ஆழ்துளைக் கிணற்றுப் பள்ளத்தினால் விபத்து, குடியால் மரணம் என நாம் சாதாரணமாய் செய்தித்தாள்களில் படித்துவிட்டு கடந்து செல்லக்கூடிய விஷயங்களுக்குப் பின்னால் உள்ள அரசியலைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். மணல் கொள்ளை, அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கு, பெருகி வரும் பேனர் கலாச்சாரம் அத்தனைக்கும் ஒரு சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள். உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் சிந்திக்க வைக்கிறார்கள் சுருக்கென்ற வசனங்கள் மூலமாக.





படத்தின் ஆணிவேரே வசனங்கள்தான். ஏற்கனவே நிறைய வசனங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விட்டன. எனக்கு மிகவும் பிடித்த மூன்று வசனங்கள்.

1. "கக்கூஸ் கட்டுறதுல ஊழல் பண்ற உங்ககிட்ட கருணைய எப்படி எதிர்பார்க்கிறது?"

2. "நகைக்கடைக் காரன் புரட்சி பண்ணுற நாட்டுல ஜனாதிபதி புரட்சி பண்ணக்கூடாதா?"

3. "காலம் மாறிடுச்சு. இப்போலாம் ஜனங்களுக்கே ஹீரோவ விட வில்லனத்தான் புடிக்குது."


ஜோக்கர் படத்தின் ஒரு பாடலைக் கூட படம் செல்லும் முன் நான் கேட்டதில்லை. ஆனால் படம் முடிந்து வரும்போது 'செல்லம்மா' என்ற பாடல் மனம் முழுதும் ஆக்கிரமித்துக்கொண்டது. "என்னங்க சார் உங்க சட்டம்" என்ற பாடல் வரிகள் சிந்திக்க வைக்கின்றன.




படத்தின் முடிவில் முத்தாய்ப்பாக பொன்னூஞ்சல் என்ற அந்த கதாபாத்திரம் "உங்களுக்காக போராடுனா நாங்க பைத்தியங்களா?" என்று வலியோடு வசனம் பேசுகிறது. முன்வரிசையில் ஒருவர் "ஹீரோவப் போட்டதுக்கு பதிலா இந்தக் கிழவனப் போட்டுருக்கணும். ஓவரா வசனம் பேசிக்கிட்டு.." என்று கமெண்ட் அடிக்கிறார். படத்தை அவர் என்னவென்று ரசித்தார் எனப் புரியவில்லை. சரிதான். வீதியில் இறங்கி மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடும் அவர்கள் ஜோக்கர் அல்லர். அனைத்து அவலங்களையும் சகித்துக்கொண்டு அதோடு அவ்வாறே வாழக் கற்றுக்கொண்ட நாம்தான் ஜோக்கர்கள்.


2 comments: